புதன், 28 டிசம்பர், 2011

ஈழயுத்தம் முடிவடைந்து 30 மாதங்கள் தீர்வில் தாமதம் ஏற்படுவதற்கு தமிழர்களை குறைகூறுகிறார் ஜனாதிபதி

ஈழயுத்தம் முடிவடைந்து 30 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், அரசியல்த் தீர்வொன்றை முன்வைக்கவில்லையென தன் மீது கூறப்படும் விமர்சனத்தை உதாசீனம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள சமாதான தொடர் செயற்பாடுகளில் பங்குகொள்ள மறுப்பதன் மூலம் தீர்வு காண்பதில் தாமதத்தை ஏற்படுத்திவருவதாக உள்நாட்டு, வெளிநாட்டு தமிழர்களை குறைகூறியுள்ளார்.

இந்த நீண்டகால பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுகுமுறையாகும். இதில் பங்குபற்றுபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களின் ஆலோசனைகள் பெருமளவில் ஏற்கப்படுமென அலரிமாளிகையில் நடந்த பேட்டியின்போது ஜனாதிபதி கூறினார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்த் தீர்வை எட்டும் எண்ணத்துடன் நேர்மையாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்ற வேண்டும். சம்பந்தன் யாருக்கோ பயப்படுவதாக தெரிகிறது. அவர் அமெரிக்காவுக்குச் சென்று எம்மைப் பற்றி முறைப்பாடு செய்கின்றார்' என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது இரண்டாம் மூன்றாம் தலைமுறை தமிழர்களான புலம்பெயர்ந்தோரால் ஆட்டுவிக்கப்படுகின்றனரெனவும் அவர் கூறினார்.

இலங்கையில் அரசியல்த் தீர்வு காணப்படின் தாம் தங்கியுள்ள நாடுகள் தம்மை இலங்கைக்கு அனுப்பிவிடுமென அவர்கள் கவலைப்படுகின்றனர். 'என்னைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. தமிழ்க் கட்சிகளே தீர்வை தாமதப்படுத்தி வருகின்றன' என அவர் கூறினார்.