சனி, 13 அக்டோபர், 2012

கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப் படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்

அமெரிக்காவின் டல் லாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர்கள் செய்யும் சேட்டைகளால் எலிசபெத் கோபம் அடைந்தார்.

சம்பவத்தன்று இவரது 2 வயது மகள் ஜோகெலைன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவளை எலிச பெத் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். பால் பாத்திரத்தால் அடித்தும், வயிற்றில் காலால் உதைத்தும் சித்ரவதை செய்தார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத எலிசபெத் குழந்தையின் 2 கைகளிலும் சக்திவாய்ந்த பசையை தடவி சுவற்றில் ஒட்ட வைத்தார். இதனால், குழந்தையின் மார்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. சுவரில் இருந்து கையை பிய்த்து எடுத்ததில் கைகளிலும், தோல்கள் சதையுடன் பிய்ந்து படுகாயம் ஏற்பட்டது.

மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டதால் குழந்தை கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் எலிசபெத்தின் மற்ற குழந்தைகளிடம் வாக்கு மூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 5 நாட்களாக நீதி மன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றது.

முடிவில் எலிசபெத்திற்கு 99 வருட சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். குழந்தை என்ற அழகிய பரிசுக்கு எலிசபெத் செய்த கொடுமைகளைப்போல் வேறு யாரும் இனி செய்யக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்நாள் வரையில் எலிசபெத் விடுதலையாகி வெளியில் வரக்கூடாது என்பதற்காகவே 99 வருட தண்டனை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். இன்னும் 45 வருடங்கள் வரை அவர் அப்பீல் செய்ய முடியாது. 30 வருடங்களுக்கு பரோலிலும் அனுப்பக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.