வியாழன், 19 செப்டம்பர், 2013

சுதந்திரச் சதுக்கத்தில் உள்ள பௌத்த கொடி குறித்து நவிபிள்ளை அதிருப்தி

இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.

இந்தச் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அது அகற்றப்படவேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை என்று அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியிருக்கிறார்.

இதே விஜயத்தின் போது, இந்த சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டிருப்பது பற்றிய பிரச்சினையிலும் நவி பிள்ளை , நல்லிணக்கம் மற்றும் அனைத்தினங்களையும் ஒன்றிணைத்தல் தொடர்பான கூட்டமொன்றில், கேள்வியொன்றை எழுப்பியதாக வரும் சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்திருக்கும், அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில், இந்த கொடி விவகாரத்தை நவி பிள்ளை விவாதித்தாகக் கூறினார்.

“இலங்கை காலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமானதா என்று ஆணையர் கேட்டார். மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் இதை மற்றவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு செயலாகப் பார்க்கலாம்”, என்றும் அவர் கூறினார்.

இதற்கு மாறாக இலங்கை அரசு, இந்த சதுக்கத்தில், தேசியக் கொடியை பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். தேசியக்கொடி, அனைத்து இலங்கையர்களுக்கும், அவர்கள் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மீறி, சொந்தமானது, அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி, என்று நவி பிள்ளை ஆலோசனை வழங்கினார் என்று ரூபர்ட் கால்வில் கூறினார்.

(பிபிசி)