செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தடுப்பதற்காக விசேட கண்காணிப்பு

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தடுப்பதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக் கைகள் இடம்பெற்று வருகின்றன என சட்டம், ஒழுங்கு  மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரான சாகல ரட்நாயக்க தெரிவித்தார்.

தெஹிவளைப் பகுதியில் ஒவ்வொரு ஐ.எஸ். உடன்  தொடர்புடையவர்களும் கண்டறியப்பட வில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளித்தார்.
 
கடந்த மூன்றுமாத காலப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கௌடான பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்று இடம்பெற்றதா? இப்பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தற்கொலை குண்டுகளுடன் நபர்கள் கைது செய்யப்பட்டனரா? அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்ன? இப்பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனரா?
 
அவ்வாறான சம்பவம் இடம்பெறாதிருப்பின் அச் சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இலங்கை குறித்த பயங்கரவாத அமைப்பின் இரையாகும் அல்லது அவ்வமைப்பிற்கான உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான இடமாகுமென புலனாய்வுப் பிரிவினால் இனங் காணப்பட்டுள்ளதாவென மரிக்கார் எம்.பி. கேள்விகளை முன்வைத்தார்.
 
இவ்வினாக்களை முற்றாக நிராகரித்த அமைச்சர் சாகல ரட்நாயக்க கூறுகையில், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் பரந்தளவில் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் இவ்வாறு செயற்படும் பல குழுக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாம் அவ்வாறான குழுக்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் பரிமாற்றங்கள் மேற்கொண்டு தொடர்பில் உள்ளோம். இவ்வாறான பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.