செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சம்பூர் மக்கள் மத்தியில் எல்லைப் பிரச்சினை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட கைகலப்பு

சம்பூர் பிரதேச மக்கள் தங்கள் காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்த தமது குடியிருப்பு காணிகளில் 10 ஆண்டுகளின் பின்னர் மக்கள் கடந்த மாதம் 25ம் திகதி மீளவும் குடியேற்றப்பட்டிருந்தனர். 
 
மீள் குடியேறியுள்ள மக்கள் தமது காணிகளையும் குடியிருப்புக்களையும் அடையாளம் கண்டுள்ள போதிலும் தமது எல்லைகளை அமைத்துக் கொள்வதில் முரண்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
 
காணி எல்லைகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட கைகலப்புகளில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு அதிகாரிகளின் உதவியையும் நாடியுள்ளனர். 
 
மக்கள் காணிகளை துப்பரவு செய்து வரும் நிலையில் கிணறு ஒன்றிலிருந்து 60 எம்.எம் ரக மோட்டார் குண்டுகள் 40 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்க செய்யுமாறு சித்தாபுர சிறப்பு அதிரடிப்படை வெடிபொருள் செயலிழப்பு பிரிவினருக்கு மூதூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த சம்பவத்தை அடுத்து பீதி அடைந்துள்ள மக்கள் ஏனைய கிணறுகனுள் இறங்கி துப்பரவு செய்ய தயக்கம் தெரிவிப்பதாக உள்ளுர் தகவல்கள் கூறுகின்றனர். 
 
(பிபிசி)