வியாழன், 7 ஏப்ரல், 2016

ஈ. பி. டி. பி. கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய செயலாளராக அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக அவர் கூறியிருந்தார்.

 இதற்கமைவாக முதலாவது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை நேற்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் நடத்தப்பட்டது.
 
 பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தையின்போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் எஸ். தவராசா உட்பட்ட பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அதன் செயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 இப் பேச்சுவார்த்தையின்போது, கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்த நிலையில் ஏற்பட்ட முரண் நிலைகள், எமது மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையிலான செயற் திட்டங்களை நாம் முன்வைத்திருந்த நிலையிலும் அவை ஒழுங்குற மேற்கொள்ளத் தவறியமை உட்பட சாதக மற்றும் பாதக நிலைமைகள் குறித்து ஈ. பி. டி. பி. கட்சியின் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நாம் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி, தேசிய நல்லிணக்கத்தை வலுப்பெறச் செய்வதனூடகவே எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் என்ற கொள்கையுடன் உழைத்து வருகின்றோம். அந்த வகையில் எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படத்தக்க வழிமுறையையே நாம் விரும்புகின்றோம். எமக்குத் தேவை எமது மக்களின் நலன்களே அன்றி, எமது தனிப்பட்ட நலன்கள் அல்ல என்பதை இதன்போது ஈ.பி. டி பி. பிரதிநிதிகள் வலியுறுத்திக் கூறினர்.

 இக் கருத்துகளுக்கு இணங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இவ் விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கதைத்து, அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தையினை ஜனாதிபதியின் தலைமையில் நடத்தத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .