செவ்வாய், 5 ஏப்ரல், 2016

தொழிற்துறைகளை செயற்படுத்துவதன் மூலம் முல்லைதீவு மாவட்ட மக்களின் வறுமையைப் போக்க இயலும்! – டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைதீவு மாவட்டம் உள்ளதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை சுட்டிக் காட்டும் நிலையில், அம் மாவட்டத்திலுள்ள தொழிற் துறைகள் முறையாக செயற் படுத்தப்படுமானால் இந்த வறுமை நிலையை அதிகளவில் போக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி,)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், முல்லைதீவு மாவட்டமானது பல்வேறு வளங்களைக் கொண்டுள்ள போதிலும், தற்போது வறுமை நிலையில் முதலிடத்தில் காணப்படுவதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
 
இம் மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை நவீனமயப்படுத்தி இயக்குவதன் மூலம் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும், நல்லதொரு வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் முடியும். மேலும், கொக்கிளாய் முதல் பேய்ப்பாறைப்பட்டி வரையிலான கடற் பரப்பில் கடற்றொழில் மேற்கொள்ள இயலாததொரு நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அதே போன்று, விவசாய செய்கையினை மேற்கொள்வதிலும் இடையூறுகள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
 
இவ்வாறான பிரச்சினைகளை அகற்றுவதன் மூலமும், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள செயற்படுத்துவதன் மூலமும், நந்திக் கடலாற்றை சுத்தஞ் செய்து புனரமைப்புச் செய்து தொழில் முயற்சிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும். பழங்களைப் பதனிட்டு பொதி முறை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, பால் வளத்தினைச் சார்ந்த தொழில் முயற்சிகளை மேற்கொள்வது மற்றும் இம் மாவட்டத்தில் இருக்கக் கூடிய ஏனைய வளங்களையும் பயன்படுத்தத் தக்க வகையில் சுய தொழில் முயற்சிகளை உருவாக்குவதன் மூலமும் இம் மாவட்டத்தின் வறுமை நிலையை அதிகளவில் போக்க முடியுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.