மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் யாழ். நகரில் வைத்து இன்று காலை யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விளம்பரங்களை ஒட்டிக்கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ். மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களின் குழுத்தலைவர் லலித்குமார் வீரராஜ் உள்ளிட்ட இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, தமது ஆதரவாளர்களின் கைது தொடர்பில் எமக்கு கருத்து வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, கட்சி ஒன்றின் கருத்தை பதாகைகள் மூலம் வெளியிடுவதற்கான சுதந்திரத்தையும் அரசாங்கம் பறித்துள்ளதாகக் கூறினார்.
அத்துடன், அரசாங்கத்தின் ஏகாதிப்பத்திய முறைக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் பதாகைகள் மற்றும் விளம்பரங்களை ஒட்டி வருவதாகவும், அது ஒருபோதும் சட்டவிரோத செயலாக அமையாது எனவும் கூறிய ரில்வின் சில்வா கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டக் கொண்டுள்ளார்.
