வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஐந்து ஆண்டுகளாக தொடரும் மிகப் பெரிய இணையதள திருட்டு சீனா மீது சந்தேகம்

கடந்த 5 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் மிகப் பெரிய இணைய தள திருட்டு குறித்து பிரபல கணனி பாதுகாப்பு நிறுவனமான “மெக் அபீ” தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ. நா, சர்வதேச ஒலிம்பிக் குழு போன்ற சர்வதேச அளவில் 72 அமைப்புகளின் இணைய தளங்களில் தகவல் திருடப்பட்டுள்ளதாக “மெக் அபீ” வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுக்கு பின்னணில் இருப்போர் குறித்து நேரடியாக குறிப்பிடாத மெக் அபீ சீனா மீது சந்தேகம் தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணைத்தளங்களில் இணையத் திருடர்கள் புகுந்து சர்வ சாதாரணமாக இரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதில் அமெரிக்காவின் வெளியுறவு, சி. பி. ஐ. மற்றும் பென்டகன் ஆகியவற்றின் இணையதளங்களில் அடிக்கடி திருடப்பட்டன. இவை தவிர சில வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் இணைய தளங்களில் இருந்தும் ரகசிய தகவல்கள் திருடப்பட்டன.

இது குறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இதன் பின்புலத்தில் ஒரு நாடு இருப்பதாக மட்டும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந் நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல கணனி பாதுகாப்பு நிறுவனமான “மெக் அபீ” இணையதளத் திருட்டுகள் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2006 முதல் இது போன்ற இணையதளத் திருட்டுகளில் ஈடுபட்டுள்ள நாடு, சீனாவாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.