திங்கள், 10 செப்டம்பர், 2012

மு.காங்கிரஸிற்கு முதல்வர் பதவி வழங்கும் கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்கது

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலிலே அரசாங்கம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே போல் கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பினரும் அதிகளவிலான வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள்.

வாக்குகளைப் பெற்றவர்கள் மாகாணசபை மூலமாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்ததாவது,

மக்கள் எதிர்ப்பார்த்த தீர்ப்பு மாகாணசபை மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது. வடமேல் மாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் அரசாங்கம் ஆட்சியமைக்கப்போவது எதிர்ப்பார்த்த முடிவாகும்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. தேர்தலுக்குப் பிறகு இன்றும் யார் ஆட்சியமைப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இன்று மாறியுள்ளது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த காலங்களைவிட தமிழ் கூட்டமைப்பினர் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆட்சியை தமிழ் கூட்டமைப்பினர் அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் கூட மக்களின் எதிர்ப்பார்ப்பு அவர்கள் மீது அதிகமாக இருக்கக்கூடியதாக உள்ளது.

தேர்தலில் ஒட்டு மொத்த தமிழ் வாக்குகளை தமிழ் கூட்டமைப்பினர் கோரியிருந்தனர். தமது வாக்கு பலத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இதன் மூலம் தமிழர் தாயகத்தை காப்பாற்றுவதாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தனர்.

இதனடிப்படையிலேயே தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தனர். மீண்டும் அடுத்த தேர்தல் வரும் பொழுது இதே வாக்குறுதியை முன்வைக்காமல் இத்தேர்தலில் கிடைத்த வெற்றியை மனதில் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தமிழ் கூட்டமைப்பினர் முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அதே போல் விட்டுக்கொடுப்புடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இவர்கள் முன்வர வேண்டும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முடியாது. இன்று சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு மேலும் இரு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்ததற்கு உதவிய அரசாங்கத்தை விமர்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கட்சித்தலைவர்களும் வேட்பாளர்களும் தேர்தல் காலங்களில் எவ்வாறான ஊடக அறிக்கைகளை விடுத்தார்கள் என்பதை திருப்பிப்பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.