ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் பெட்ரோ லியோனார்டோ மாஸ்செரோனி (75), இவரது மனைவி மார்ஜோரி ராஸ்பி மாஸ்செரானி (67). இவர்கள் இருவரும் அணு விஞ்ஞானிகள். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் அலமாஸ் நகரில் உள்ள தேசிய ஆய்வகத்தில் பணி புரிந்தனர்.

அப்போது, அணு ஆயுதங்கள் தயாரிக்க அவற்றின் ரகசியங்களை வெனிசுலா நாட்டுக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. எனவே, அமெரிக்காவின் உளவுத்துறை (எப்.பி.ஐ.) அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியது.

விசாரணையில் அது உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அல்புகொரோகுவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீது 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவை நிரூபிக்கப்பட்டால் தம்பதிக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.