செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஆணுறுப்பின் நுனித்தோல் அகற்றும் தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் களும் யூதர்களும் ஆர்ப்பாட்டம்

இளம் வயது ஆண்களின் மர்ம உறுப்பு நுனித்தோல் (கத்னா செய்வது) அகற்றுவதற்கு தடை விதிக்கும் ஜெர்மனி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு முஸ்லிம்களும் யூதர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று முன்தினம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளும் பங்கேற்றன.   கடந்த ஜுனில் ஜெர்மனி, கொலெக்னே நீதிமன்றம் இளம் வயதினருக்கு மர்ம உறுப்பின் நுனித்தோல் அகற்றுவது சட்டவிரோதமானது என தீர்ப்பு அளித்தது. எனினும் ஜெர்மனி அரசு இந்த மத செயற்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெர்லின் யூத மதத் தலைவர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களும் உரையாற்றினர். ‘மத உரிமைக்காகவே நான், இங்கு வந்தேன்’ என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு தெரிவித் துள்ளார்.   முஸ்லிம் சிறுவர் ஒருவரின் இந்த மதச் சடங்கின்போது சிறுவனின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டது தொடர்பாக கொலெக்னே நீதிமன்றம் மேற்கொண்ட விசார ணையை தொடர்ந்தே சிறுவர்களுக்கு மர்ம உறுப்பின் நுனித்தோல் அகற்றும் சடங்கை நீதிமன்றம் தடை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த சத்திர சிகிச்சையை ஜெர்மனி மருத்துவ சம்மேளனம் நிறுத்திக் கொண்டது.

எனினும் இந்த தீர்ப்பு மத நடவடிக்கைக்கு எதிரானது என ஜெர்மனி முஸ்லிம் மற்றும் யூதர்கள் குற்றம்சாட்டினர். எனினும் இந்த மதச் சடங்கு சரியான முறையில் செயற்படுத்துவதற்கு சட்ட அங்கீகாரம் இருப்பதாக ஜெர்மனி அரசு கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.