வியாழன், 4 நவம்பர், 2010

ஹெரோயின் கடத்த முயன்ற இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் இலங்கையைச் சேர்ந்த பாக்கியநாதன் என்று அழைக்க்படும் நாதன் (55வயது) மற்றும் இலங்கை தமிழர் செல்வம் (42வயது) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 976 கிராம் எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது 95 கேப்சியூல்களில் அடைக்கப்பட்டிருந்தததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை விழுங்கி இலங்கைக்கு கடத்திச் செல்வதற்கு நாதன் தயாராக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் அவை, ராஜஸ்தானில் இருந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு செல்வத்தால் கடத்தி கொண்டுவரப்பட்டது என்பது தெரிய வந்தது. அங்கிருந்து நாதனுடன் செல்வம் இவற்றை பஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.

அவற்றை விழுங்கி, விமானம் மூலம் இலங்கைக்கு அவர்கள் கொண்டு செல்ல இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திய ஹெராயினின் மதிப்பு இந்திய சந்தையில் 5 லட்சம் ரூபாவெனவும், சர்வதேச சந்தையில் அவற்றின் இந்திய மதிப்பு ஒரு கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.