ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணை ஏற்றிச் சென்ற 10 லாரிகளை தீவிரவாதிகள் கொளுத்தினர். இந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான எண்ணை மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தரை வழியாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர்களும், லாரிகளும் எண்ணை மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானை கடந்து செல்கின்றன.
அதேபோல, நேற்று இரவு கராச்சி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் சரக்குகளுடன் புறப்பட்டச் சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் அவை சென்று கொண்டு இருந்தன. சிந்து மாநிலம், கைப்பூர் என்ற இடத்தில் அந்த டேங்கர் லாரிகளை தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் எண்ணை ஏற்றிய டேங்கர் லாரிகளுக்கு அவர்கள் தீவைத்தனர். மொத்தம் 10 லாரிகளை தீவைத்து கொளுத்தினர்.
இந்த சம்பவத்தால், 3 லாரி டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். டிரைவர்கள் 2 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
டேங்கர் லாரிகளில் எரிந்த தீ ரோட்டோரத்தில் இருந்த ஓட்டல் மற்றும் கடைகளுக்கும் பரவியது. இதில் 3 கடைகளும், ஒரு ஓட்டலும் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.
