ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் மூலம் பிரஸஸ்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கூடாகவே இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 07.1.2001ஆம் திகதி ஒழுங்குவிதிக்கு அமைய, பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை அவ் ஒன்றியம் மீளமைத்து வருகின்றது. அந்தப் பட்டியலிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் உள்ளடக்குவதற்காக அரசாங்கம் விண்ணப்பித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதனுடன் இணைந்த அமைப்புக்களுக்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் விபரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டிலிருந்து இணைத்துவருகிறது.
அத்துடன், கடந்த 6ஆம் திகதி புதுப்பித்த, பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் பிரிட்டன் உள்ளடக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
