மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பிற்கான, புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத் திட்டமானது, மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
மேலும் இத் தேசிய செயற்பாட்டுத் திட்டமானது, 2008 இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில், உலகார்ந்த கால இடைநிலைசார் மீளாய்வு அறிக்கைக்கு அமைவாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பில் சிவில் சமூக நிறுவனங்னகள் மற்றும் அனைத்து தரப்பினரது பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தவிர இச் செயற்பாட்டுத் திட்டத்தின் தயாரிப்பின் போது, நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான தற்போதய நிலை மற்றும் பல முக்கிய ஆவணங்கள் போன்றனவும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன், உலகார்ந்த கால இடைநிலைசார் மீளாய்வு அறிக்கைக்கும் முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவில் மற்றும் அரசியல் உரிமை, பொருளாதார சமூக மற்றும் கலச்சார உரிமை, சிறுவர் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், குடிபெயர்ந்த தொழிலாளர் உரிமைகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான உரிமைகள் போன்றவற்றிக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ் அனைத்து உரிமைகளும் நாட்டின் அரசியலமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திட்டத்தின் செயற்பாடுகள் இரு வேறுபட்ட அமைச்சரவை குழுக்களால் கண்காணிக்கப்படவுள்ளது.
