வியாழன், 3 நவம்பர், 2011

மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு.

இவ்வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற 18 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பங்குபற்றல் தொடர்பிலான அறிக்கையை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இதில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நாடுகளுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டது. அதன் பெறுபேறாக இலங்கைக்கு பாகிஸ்தான், கியூபா, சீனா, ரஷ்யா, தாய்லாந்து, சிலி, மலேசியா, மற்றும் எல்ஜீரியா உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவு நல்கியுள்ளன.

ஏனைய அமைச்சரவைத் தீர்மானங்கள் :

பாடசாலை சீருடைக்கு 1554 மில்லியன் ரூபா

2012 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் சீருடைக்கான துணியைப் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதற்கென 1554 மில்லின் ரூபாவை ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு பத்தரமுல்லைக்கு

கோட்டை குடியரசு கட்டிடத்தில் 150 வருடங்கள் பழைமைவாய்ந்த கட்டிடத்தில் இயங்கும் வெளிவிவகார அமைச்சு பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவிருக்கின்றது. அங்கு அமைச்சுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 3.5 ஏக்கர் இடத்தை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.