புதன், 8 பிப்ரவரி, 2012

போதைப்பொருள் புள்ளிகள் சம்பந்தப்பட்ட அரசியலுக்கு எதிராக போராடுவேன்: ராஜித

போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக குழுக்களும் கலந்த அரசியலுக்கு எதிராக தான் போராடவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்று தனக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு கூறினார். போதைப்பொருள் வியாபாரத்துக்கும் பாதாள உலக செயற்பாடுகளுக்கும் எதிராக கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ள தான் தயங்கியதில்லை என அவர் கூறினார்.

முல்லேரியா துப்பாக்கி பிரயோக சம்பவம் குறித்து கூறிய அவர், அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தனது நெருங்கிய அரசியல் சகா எனக் கூறினார்.

'நாம் மக்கள் கட்சியில் ஒன்றாக அரசியல் செய்தோம். போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலகக் குழுக்களுக்கு நாம் அஞ்சவில்லை. ஒரு வானொலி அலைவரிசை என்னை தாக்க ஆரம்பித்துள்ளது. அது குறித்து நான் அலட்டிக்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் இதைவிட கடுமையான தாக்குதல்களுக்கு நான் உள்ளானேன். இவற்றுக்கு மத்தியிலும் நான் எனது பயணத்தை கைவிடப்போவதில்லை. எனினும் சிலர் தமது அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக மாத்திரம் அரசாங்கத்துடன் இணைந்தனர்' என அமைச்சர் ராஜித சோனரட்ன கூறினார்.