வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஒரு ஆண்டுக்கு முன்பே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் ஆகிறது

ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு ஆண்டுக்கு முன்பே அமெரிக்க ராணுவம் வாபஸ் ஆகிறது.அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் உதவியுடன் பதுங்கி அவர்களை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது.

அதை தொடர்ந்து அங்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை முகாமிட்டு தீவிரவாதிகளை அழித்து வருகிறது. அங்குள்ள நேட்டோ படையில் 99 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த படை வீரர்களை வருகிற 2014-ம் ஆண்டில் முழுவதும் வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தற்போது ஒரு வருடத்துக்கு முன்னதாக படைகளை வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆண்டு இறுதியில் 22 ஆயிரம் வீரர்களையும், அடுத்த ஆண்டில் (2013) முழுவதும் வாபஸ் பெறப்பட உள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ மந்திரி பனேட்டா அறிக்கை தாக்கலின் போது வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருகிறது. மேலும் தலிபான் தீவிரவாதிகளை சமாளிக்க ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.