தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களுக்கு கடந்த மாத இறுதிக்குள் தீர்வை வழங்குவதாக தொழில் அமைச்சரிடம் உத்தரவாதம் அளித்திருந்த போதும் அது எதுவும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான முரளி ரகுநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி தொழில் அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருந்தோம். அப் பேச்சுவார்த்தையில் தோட்ட நிர்வாகங்கள் கடந்த முப்பதாம் திகதிக்கு முன்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்ட போதும் தோட்ட நிர்வாகங்களால் உரிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் மேலும் சிக்கல்களை எதிர்கொண்டே வருகின்றனர். அடிப்படையில் போகவந்தலாவை பிளான்டேசன் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் மனிதாபிமானப் பிரச்சினையாகவும் அவர்களது உரிமையாகவும் உள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி அட்டன் உதவித் தொழில் ஆணையாளரின் கவனத்திற்கு நாம் இப் பிரச்சினையினைக் கொண்டு தற்போது கொண்டு சென்றுள்ளோம்.
ஹட்டன் உதவித் தொழில் ஆணையாளர் இப் பிரச்சினை தொடர்பாக தன்னால் நடவடிக்கை எடுப்பதற்கான போதுமான அதிகாரங்கள் போதுமானதாக இல்லாமையினால் இவ் விடயத்தினை கொழும்பில் உள்ள தொமில் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
நாம் தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக அவதானித்தே பணியாற்றி வருகின்றோம். மனிதாபிமான அடிப்படையில் கூட தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை உணர்துகொள்ளாத சூழ்நிலையே காணப்படுகின்றது. இந் நிலையில் நாம் எமது தலைவர் மனோ கணேசணுடன் இது பற்றி கலந்துரையாடி வருகின்றோம்.
தொழிலாளர் தொடர்பான நலன்களுக்காக உச்சக்கட்டம் எதைச் செய்ய முடியுமோ அதுவே எமமுன் இன்றைய தெரிவாக இருக்கின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான முரளி ரகுநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
