கிழக்கு மாகாண கல்வி நிர்வாக சேவைக்கென ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி நிர்வாக சேவையில் உள்ள ஐவர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். எனினும் அவர்கள் தொடர்ந்தும் சேவையில் இருப்பதாக சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அது 24 / 2011 சுற்றறிக்கையின் படி 60 வயதிற்கு மேற்பட்டோர் கல்வி நிர்வாக சேவையில் இருக்கக் கூடாது என்ற கொள்கைக்கு மாறானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற அதிகாரிகள் இவ்வாறு கடமையில் சேர்த்துக் கொள்ளப்படுவதால் திறமையுடைய ஏனைய அதிகாரிகள் முன்னோக்கிச் செல்ல அது முட்டுக்கட்டையாக அமையும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் மூலம் கிழக்கு மாகாண ஆளுநர், அரச சேவை ஆணைக்குழு, மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
