வியாழன், 2 பிப்ரவரி, 2012

பாராளுமன்றத் தெரிவுக் குழுவே ஜனநாயக நடைமுறை!

நாட்டின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவே சிறப்பான ஜனநாயக நடைமுறை என அமைச்சரவை பதில் பேச்சாளரும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சருமான அநுரபிரயதர்சன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:

மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது பற்றி பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். அரசாங்க தரப்பு அமைச்சர்களும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இவை அரசாங்கத்தின் கருத்தல்ல.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும் ஏனைய தரப்பினரின் முன்மொழிவுகளை முன்வைக்கவுமே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

என்னதான் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு உண்டு.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான மற்றும் ஜனநாயகரீதியான முடிவை பாராளுமன்ற தெரிவுக் குழுவினாலேயே முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.