திங்கள், 6 பிப்ரவரி, 2012

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் சந்ததியினர் யாழில் உருவாக வேண்டும்: யாழில் ஜனாதிபதி

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த நாட்டின் எதிர்காலத்தினை பொறுப்பேற்று வழிநடத்தப் போகின்றவர்கள் நீங்கள் தான்.

உங்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள வசதி வாய்ப்புக்கள் கிராமப்புற பாடசாலைகளிலும் செய்து கொடுக்கப்படுகின்றன.

கடந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளில் கிராமப்புற பாடசாலைகளே முன்னிலையில் உள்ளன. கொழும்பில் உள்ள பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதி வாய்ப்புக்களும் கிராமப்புற பாடசாலைகளில் ஏற்படுத்திக் கொடுத்து அந்த மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது நமது கடமை.

இந்த யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவரான டக்ளஸ் தேவானந்தா இன்று அமைச்சராக இருக்கிறார். இவரைப் போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்' என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தமிழில் உரையாற்றுகையில்,

'உங்கள் பகுதியில் நீச்சல் தடாகம் உள்ள ஒரேயொரு பாடசாலை என்றால் அது உங்களுடைய மத்திய கல்லூரி தான்.

உங்கள் பகுதியில் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும். நீங்கள் சர்வதேசத்தில் சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய பெற்றோர்களை மறந்து விடாதீர்கள் அதேபேல் இந்த நாட்டையும் மறந்து விடாதீர்கள். நல்ல மனிதநேயமிக்க மாணவர் சமுதாயம் யாழ். மண்ணில் உருவாக வேண்டும்.

இன்றைய மாணவர்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகின்றவர்கள். இதற்கு அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றார்.