புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்கான அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்களை நடத்த தடை விதிப்பதா? இல்லையா? என மார்ச் 19ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.
மார்ச் 24ஆம் திகதி நடத்தவிருந்த இந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை தடை செய்யக் கோரும் மனுக்களை தாக்கல் செய்த தரப்பினர்களின் வாதத்தைக் கேட்ட நீதியரசர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, தீர்ப்பு வழங்குவதற்கான தினத்தை அறிவித்தார்.
ஏற்கனவே தேர்தல் ஆணையாளர், மார்ச் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பை அன்றைய தினம் நடத்துவதில்லை என தீர்மானித்துவிட்டார்.
ஆணைகோரும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணையாளர் நீதிமன்றத்தில் கூறினார்.
