வெள்ளி, 30 மார்ச், 2012

எரிபொருள் விலையேற்றத்தால் தேயிலை உற்பத்தியாளர்கள் நட்டத்தில்

எரிபொருள் விலை அதிகரிப்பின் பின் ஏற்பட்ட மின் கட்டண உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு என்பவற்றால் தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக இலங்கை தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்ய தற்போது மேலதிகமாக 5.50 ரூபாவை செலவிட வேண்டியுள்ளதென இலங்கை தேயிலை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயந்த கெரகல தெரிவித்துள்ளார்.

வலயத்தில் உள்ள தோட்ட கம்பனிகள் இது குறித்து தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெருமதி குறைந்து செல்வதனாலும் தமது தேயிலை உற்பத்தி நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நட்டத்தை சமாளிக்க திறமைமிக்க செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாளைக்கு 16 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளி 19 தொடக்கம் 21 கிலோ வரை பறித்தால் நட்டத்தை ஓரளவு சமாளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வலய கம்பனிகள் இந்த இலக்கை எட்டியுள்ள போதும் பல கம்பனிகள் இலக்கை எட்டத் தவறியுள்ளதாக ஜயந்த கெரகல குறிப்பிட்டார்.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்திற்கு அப்பால்பட்டு 16 கிலோ கொழுந்துக்கு மேல் பறிக்க முடியாது என மத்திய மலைநாட்டின் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.