திங்கள், 19 மார்ச், 2012

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக எதிர்காலத்தில் தமிழர் தெரிவானால் ஏற்றுக்கொள்வோம்: அதாவுல்லா

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக எதிர்காலத்தில் தமிழ் இனத்தை சேர்ந்தவர் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

"முதலமைச்சர் தெரிவென்பது மக்களாளேயே மேற்கொள்ளப்பட்ட வேண்டும். அதனை யாரும் சூடாக்க கூடாது. கிழக்கு முதலமைச்சர் முஸ்லிமா அல்லது தமிழரா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்" என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் விசேட மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"கிழக்கு மாகாணத்தில் தற்போது மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றன. இந்நிலையில், மாகாணத்தில் செல்வாக்குடைய மக்களின் ஆதரவை பெற்ற எவரும் முதலமைச்சராக வர முடியும். அவர் முஸ்லிமாகவோ அல்லது தமிழராகவோ அல்லது சிங்களவராகவோ இருக்க முடியும்.

தமிழ் முதலமைச்சர் என்றோ அல்லது முஸ்லிம் முதலமைச்சர் என்றோ உணர்வு ரீதியாக கோருவதன் மூலம் அரசியல் காரணமாக இன ரீதியான பிளவுகள் மீண்டும் உருவாகலாம்" என்றார்.