ஞாயிறு, 15 ஜூலை, 2012

புலிகளுக்காக ஆட்சியை இழந்ததாக கருணாநிதி புரளி அதிகாரம் உள்ளபோது மெளனம் இல்லாமல் போனதும் ஞானோதயம்!

விடுதலைப் புலிகளின் நலன்களுக்காகத் தான் 1991இல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கலைஞர் மேற்படி கூறியுள்ளார். டெசோ மாநாட்டிற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், இலங்கையிலே உள்ள தமிழ் எம்.பிக்களையும் அழைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையில் கலைஞர் கருணாநிதி தான் இழந்து தவிக்கும் தமிழகத்தின் முதல்வர் பதவியை மீண்டும் கைப்பற்றவே இன்று புலிக்கதை, ஈழத்தமிழருக்கு அனுதாப அறிக்கை, புலிகளால் ஆட்சியை இழந்த பொய்யான கதைகளை அவிழ்த்து வருகின்றார். அதன் ஒரு செயல்வடிவமே டெசோ மாநாடு.
 
இவர் இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்றபோது தமிழர் பல துன்பங்ளுக்கு முகங்கொடுக்க நேரிட்ட போது ஆட்சியிலிருந்தும் எதுவுமே செய்ய முனையவில்லை. அப்போது வாய்மூடி மெளனியாக இருந்தவர் இன்று ஆட்சி பறிபோனதும் அதை மீண்டும் கைப்பற்ற படாதபாடு படுகிறார்.
 
அன்று இவர் ஒருசிறு குரலாவது ஈழத் தமிழருக்காகக் கொடுத்திருந்தால் இவரை உண்மையானவராக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பர். ஆட்சியிலிருக்கும்போது மெளனம், ஆட்சி கவிழ்ந்ததும் ஞானோதயம் என்பது போலவே கலைஞரின் செயற்பாடு அமைந்துள்ளதாக தமிழக மக்கள் இப்போது வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.