வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சிறைகளிலுள்ள புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் பணி ஆரம்பம் முதற்கட்டம் 74 பேர் தெரிவு

சிறைச்சாலைகளில் இருக்கும் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேகநபர்கள் 74 பேர் முதற்கட்டமாக புனர் வாழ்வளிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று தெரிவித்தார்.   சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, அவர்களை புனர்வாழ்வளிப்பதன் மூலம் விடுதலை செய்யவென முன்னெடுக்கப்பட்ட திட்டத்தினடிப்படையிலேயே முதற்கட்டமாக 74 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.   இதன்படி நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலுமிருந்த 48 தமிழ் சிறைக்கைதிகள் தமது வழக்குகளின் முடிவினடிப்படையில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் தமிழ் சிறைக் கைதிகள் 26 பேர் எவ்வித வழக்குகளுமின்றிய நிலையில் நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அமைச்சர் கஜதீர குறிப்பிட்டார்.   முதற்கட்டமாக இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விரைவில் சமூகமயப்படுத்தப்படுவரெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை தமிழ் சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தவென மன்னார் நீதிமன்றத்திற்கு புதிதாக 32 வழக்குகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.