இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மேள் கொள்ளப்படவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டிருக்கின்றது.
அந்தப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.
யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசடைந்து செல்வதுடன், அங்கு நிலத்தடி நீர்வளம் குறைந்திருப்பதனால் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச கடற்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கு வடமாகாண சபை நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.
இது குறித்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் இலங்கேஸ் கருத்து தெரிவிக்கையில்,
கடல் நீரை நன்னீராக்கும்போது அதில் இருந்து மிஞ்சுகின்ற கழிவுகளாகிய உப்பு கரையோரகத்தில் தேங்கி மீன்வளத்தை அழித்துவிடும் என கூறினார்.
மீன்வளம் அழிவந்தால், கரைவலை மீன்பிடி தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமது பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அதன் விளைவாக அவர்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர வேண்டிய அவல நிலை ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது என்றார் ரவிச்சந்திரன் இலங்கேஸ்.

