வியாழன், 18 பிப்ரவரி, 2016

நீதிமன்ற விசாரணைகள் மூலமாக குற்றவாளிகள் யார் என்பது நிரூபண மாகி வருகின்றது – டக்ளஸ் தேவானந்தா

என்மீதும் நான் சார்ந்த கட்சிமீதும் அவதூறுகளையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட முறையில் சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலமாக தற்போது நிரூபிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரியாலையில் இன்றையதினம்(17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –
 
கடந்த காலங்களில் என்மீதும் நான் சார்ந்த கட்சி மீதும் சுயலாப அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறிவந்திருந்தனர்.
 
அதன் அடிப்படையில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம். நடராஜா ரவிராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலரது கொலைகளுடன் எமது கட்சியை தொடர்பு படுத்தி பொய்ப்பிரசாரங்களை திட்டமிட்ட ரீதியில் பரப்பிவந்ததை யாவரும் நன்கறிவார்கள்.
 
 
இருந்தபோதிலும் அண்மைய காலங்களாக குறித்த படுகொலைகளின் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கொலைச்சூத்திரதாரிகள் யார் என்பது குறித்தும் அவற்றின் பின்னணிகள் குறித்தும் தற்போது உண்மைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. அந்தவகையில் நாம் கருத்தை கருத்தால் மட்டும் எதிர்கொள்பவர்களே அல்லாமல் கருவியாய் அல்ல என்பதை எப்போதும் உறுதியாக கூறிவருகின்றோம். அதுமட்டுமன்றி அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை.
 
மக்களாகிய உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் இங்கு பிரஸ்தாபிக்கின்ற போது இடர்பட்ட மக்களுக்காக நாம் பட்ட துன்ப துயரங்களை நீங்கள் அறிந்திருக்க முடியும் என நான் நம்புகின்றேன்நெருக்கடிகள் மிகுந்த காலகட்டத்தில் எமது மக்களுக்காக பலவேறு தடைகளையும் கஸ்டங்களையும் எதிர்கொண்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவுசெய்திருந்தோம் என்பதுடன் இயல்புச்சூழலுக்காகவும் நாம் பல தடைகளையும் இடர்களையும் கடந்து வந்துள்ளோம்.
 
ஆனால் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உங்களிடம் வரும் சுயலாப அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றியோடு உங்களை நட்டாற்றில் விட்டுவிடுகின்றனர். ஆனால் நாம் எமது மக்களுக்காக கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் எவ்வாறாகப் பயன்படுத்தியிருந்தோமோ அதேபோன்று எதிர்காலங்களில் தொடர்வதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
 
அதற்கு மக்களாகிய உங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்ட விரும்பகின்றேன் இதன்போது மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளை எதிர்காலத்தில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.