மக்களின் உயிரை காப்பாற்றும் வைத்தியர்களுக்கு வழங்காத வரப்பிரசாதங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பெறமுற்படுகின்றமையின் மூலம் அரசாங்கத்தின் சுயநல போக்கு வெளிப்படுகின்றது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நல்லாட்சி அரசாங்கம் எதிர்க்கட்சியாக அரச வைத்திய அதிகாரிகளையே நினைக்கின்றது. அதனால்தான் மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றில் பேசாது எம்மை குறை கூறுவதில் அதிகம் நாட்டம் காட்டுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களுக்கான சம்பளம், ஊழியர்களுக்கான சம்பளம், வாகன அனுமதி பத்திரத்திற்கான மேலதிக கொடுப்பனவுகள், தொலைபேசி கட்டண பாவனைக்கான மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளையும் அதிகரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு, வரி சழுகையுடன் கூடிய வாகன அனுமதிப்பத்திரம், அரச சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பல வரப்பிரசாதங்கள் போன்றவற்றை நீக்கியிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரிடமும் பேச்சுவார்த்ததைகளை நடாத்தியும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது தங்களின் சுயநலனுக்காக அனைத்து விதமான கொடுப்பனவுகளையும் அதிகரித்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.
