வியாழன், 27 டிசம்பர், 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (27) காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை, வியாபார உரிமம் இல்லாது இயங்கலாமா மதுபானக்கடை, வேணாம் வேணாம் மதுக்கடை வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இந்த போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 7 வருட காலமாக அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வருகின்றதாகவும், கட்டிட அனுமதியின்றியும் இயங்கி வருகின்றது. இப்பகுதியில் மதுபானக்கடை இருப்பதனால், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வர முடியவில்லை.

சனசமூக நிலையத்திற்குச் சென்று மாணவர்கள் படிக்க முடியவில்லை. மதுபானசாலையில் மதுவாங்கி கொண்டு வந்து அந்தப் பகுதியில் வைத்து அருந்துவதுடன், வீதியால் செல்பவர்களுக்கு மதுப்பிரியர்கள் இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த மதுபானசாலை சிவன் கோவிலுக்கு அருகாமையில் இருப்பதனால், இந்த மதுபானசாலையை அகற்றக் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதனால் மேலதிகமான வழக்குகளைப் பதிவு செய்ய முடியாதுள்ளது. பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, மதுபானசாலை தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆப்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த மதுபானசாலை அகற்ற முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்தவகையில் இந்த மதுபானசாலையை அகற்ற முடியாதவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

அதேவேளை, இந்த மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறியிடம் மகஸர் கையளித்ததுடன், தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், இந்த மதுபானசாலையை தடை செய்யாவிடின் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.