தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளினதும் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையை அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசனைக்கமைய வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்போது காணிகளின் பட்டியலொன்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் சரியான முறையில் தயாரித்துக்கொள்ள காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்.
காணிகளின் சகல விபரங்களையும் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
கொழும்பு களுத்துறை இரத்தினபுரி கம்பஹா கண்டி ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் மேற்கொள்ளப்படுவதுடன் அம்மாவட்டங்களின் குறைந்தது 500 ஏக்கர் அளவு காணி விபரங்கள் திரட்டப்பட்டு அவற்றில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட உள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
