திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் ஆட் கடத்தல்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை தமிழகத்தின் க்யூ காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கும் பணிகளில் குறித்த நபர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆனந்த குமார்(46), ஜெயலதா, திருகோணமலையைச் சேர்ந்த ரமேஸ் (33) மற்றும் மதுரையைச் சேர்ந்த வீரமணி(45) ஆகியோரே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகத்தில் குறித்த நபர்கள் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.