செவ்வாய், 7 செப்டம்பர், 2010

18வது சீர்திருத்தத்திற்கு மத்திய மாகாண சபையில் எதிர்ப்பு

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு மத்திய மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிட்டுள்ளனர். இது தொடர்பில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்தார். மத்திய மாகாண சபை கூட்டம், சபைத் தலைவர் தலைமையில் இன்று காலை கூடியது.

இதன்போது மத்திய மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர். 18வது யாப்பு சீர்திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியே மத்திய மாகாண எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசாங்கத்தின் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது. 13வது சீர்திருத்தம் மற்றும் 17வது சீர்திருத்தங்களில் சிறுபான்மையினருக்குக் நன்மை பயக்கும் மாகாண சபை அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் என்பனவற்றிற்கு 18வது சீர்திருத்தத்தின் மூலம் பாதிப்புக்கள் ஏற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.