தமிழ்நாடு கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பண்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி வாணி. திருமணத்திற்கு பிறகு கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமைச் சேர்ந்த நந்தினிக்கும் ராஜேசுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக எளாவூரில் தனியே வாடகை வீட்டில் இலங்கை அகதிபெண் நந்தினியுடன் ராஜேஷ் குடும்பம் நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை எளாவூரில் உள்ள இலங்கை அகதி பெண் நந்தினி வீட்டில் வாலிபர் ராஜேஷ் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பாக்கம் பொலிஸார் ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ராஜேசின் தம்பி பன்னீர்செல்வம் ஆரம்பாக்கம் பொலிஸில் முறைபாபடு செய்துள்ளார். அதில் தனது அண்ணன் ராஜேஷ் இலங்கை அகதி பெண் நந்தினியுடன் 4 வருடங்களாக தனியே குடும்பம் நடத்திவந்ததாகவும், தற்போது அவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை நம்பமுடியவில்லை எனவும், இலங்கை அகதி பெண் நந்தினி மற்றும் அவரது தம்பி மதி ஆகியோர் ராஜேசை கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.(நக்கீரன்)