தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் மறைந்த தலைவரையும் மோசமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ள குமரன் பத்மநாபன் ஒரு தமிழினத் துரோகி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோபாலசாமி தெரிவித்துள்ளார். கேபி குறித்து இந்திய ஊடகமொன்றுக்கு வைகோ அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு கூறுயுள்ளார்.
"இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகப் படலமும் தொடர்ந்தே வந்திருக்கிறது. தமிழீழம் வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்க, பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்ட ஈழத் தந்தை செல்வநாயகத்தின் மறுவடிவமா கே.பி?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"உலகத்தின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் உள்ளமெல்லாம் இருக்கும் ஒரே தீர்வு... தனித் தமிழ் ஈழம்தான். இலங்கைக்குள் இனி தமிழனுக்கு நிம்மதி என்பது வரவே வராது. இதை நாம் சொல்லவில்லை... அமெரிக்க மருத்துவர் எலின் ஷான்டர் சொன்னார்." என வைகோ குறிப்பிட்டுள்ளார். எலின் ஷான்டர் உடம்பில்கூட தமிழ் இரத்தத்துக்கான துடிப்பும் தவிப்பும் ஓடுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
