வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி புதுடில்லியில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலங்களில் இருந்த எல்லாப் பகையுணர்வையும், காயங்களையும் இலங்கையர்கள் மறந்துவிட விட வேண்டுமென அவர் கூறியுள்ளார். தமிழ்ச் சகோதரர்கள் போரினால் இழந்த வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகவும் பரந்த மனதுடன் உதவ வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய - இலங்கை எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளதென தெரிவித்துள்ள அவர், தனது இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல எனவும், ஏற்கனவே இருநாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்து கொண்டு தான் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தகைய கட்டமைப்பு உள்ளது என்பது பற்றியும் பார்க்க வேண்டியுள்ளதாகவும், எத்தகைய பாதுகாப்பு உறவு பேணப்படவுள்ளது என்பது பற்றி இருநாட்டு அரசியல் தலைவர்களும் தான் தீர்மானிப்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். .
