செவ்வாய், 7 ஜூன், 2011

கி.மாகாண முதலமைச்சரால் திகிலிவெட்டை அரசினர் தமிழ் பாடசாலைக்கு கட்டடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள படுவான்கரையின் போரதீவுபற்று கல்விக்கோட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனால் இருமாடிக் கட்டடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

போரதீவுபற்று கல்விக்கோட்டத்துக்குட்பட்ட திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பல தசாப்த காலம் எந்தவொரு கட்டடமும் இல்லாது இயங்கி வந்தது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் முதலமைச்சர் சந்திரகாந்தன் குறித்த பாடசாலைக்கு தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் இருமாடிக் கட்டத்தினை அமைத்துக் கொடுத்துள்ளார்.

இக் கட்டடம் நேற்று உத்தியோகபூர்வமாக முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் அதிபர் இரா ஜீவரெட்ணம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் த.உதயஜீவதாஸ், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிபர்கள், பிற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.