வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இலங்கையர்கள் மீது இந்தியாவில் தாக்குதல்

இலங்கையர்கள் மீது மற்றுமொரு தாக்குதல் சம்பவம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் புதன்கிழமை இரவு மூன்று இலங்கையர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களது டீ-சேர்ட் களட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ராஜ்குமார், மகேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு யாத்திரிகளாக சென்றிருந்த இலங்கையர்கள் மூவரும் சிங்கள எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த டீ-சேர்ட் அணிந்து இருந்ததையிட்டு அவர்களை அச்சுறுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எலிபிட்டிய பகுதியில் இருந்து யாத்திரிகளாக இந்தியாவுக்கு 84 பேர் சென்றிருந்தனர் இந்நிலையில் இவர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில் காசி மற்றும் இராமேஸ்வரம் சென்றிருந்த இவர்கள், எக்மோர் பகுதியில் உள்ள இலங்கை மஹா போதி நிலையத்தில் தங்கச் சென்றுள்ளனர்.

அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பிரம்பூரில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தனர். இவ்வாறு தங்கியிருந்த மூவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நினைவுகளுடன் இலங்கை திரும்பலாம் என எண்ணி இருந்தோம் ஆனால் இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்தது மனக்கசப்பினை ஏற்படுத்தியுள்ளதாக யாத்திரிகள் தெரிவித்துள்ளனர்.