சனி, 6 ஆகஸ்ட், 2011

படுவான்கரை மக்களுக்கு படையினரால் கட்டிடப்பொருட்கள்

வெள்ள அனர்த்தம் காரணமாக மிகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்த படுவான்கரை பிரதேச மக்கள் தங்களின் வீடுகளை கட்டிக்கொள்வதற்கு படையினரால் கட்டிடப்பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்த காலங்களின் போது வீடுகளை இழந்தவர்கள் தங்களது வீடுகளை கட்டிக்கொள்வதற்கான கட்டிடப்பொருட்ளே இவ்வாறு வழங்கப்பட்டன.

சுயாதீன ஊடக வலையமைப்பு மற்றும் மக்கள் வங்கிகளின் உதவியுடன் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட வேத்துச்சேனை, காக்காச்சிவட்டை, மாவடிமுன்மாரி, பிலாச்சோலை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கே இந்த கட்டிடப்பொருட்கள் வழங்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேசங்களுக்கான கட்டளையிடும் அதிகாரி மேஜர் கொல்வின் டி அல்விஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 234வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் சுதந்த திலகரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சுமார் 20 குடும்பங்கள் தமது வீடுகளை கட்டிக்கொள்வதற்கான சீமேந்து, செங்கல், கூரைத்தகடுகள், கூரை ஓடுகள் வழங்கப்பட்டன.