வியாழன், 15 செப்டம்பர், 2011

இராக்கில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்: 17 பேர் சாவு

இராக்கில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இராக்கின் பாபில் மாகாணத்தில் உள்ள மெதாதியா நகரத்தில், பாதுகாப்புப் படையினர் அடிக்கடி வந்து செல்லும் உணவகம் ஒன்றில் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 போலீஸார் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையில் அன்பர் மாகாணம், ஹபானியா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்துக்குள் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தலைநகர் பாக்தாதின் வடக்குப் பகுதியில், குவாஹிரா என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இன்னும் சில மாதங்களில் அமெரிக்கப் படைகள் இராக்கை விட்டு வெளியேறவுள்ள நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மீதே தாக்குதல் நடத்தப்படுவது, அவர்களின் செயல்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.