திங்கள், 19 செப்டம்பர், 2011

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற சிலரை இன்னமும் காணவில்லையாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற சிலரை இன்னமும் காணவில்லை என்று உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பயண முகவர்களிடம் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இவர்கள் பயணித்ததாகவும், ஆனால், அவர்கள் சட்ட விரோதமாகவே அனுப்பி வைக்கப்பட்டதாக தமக்கு பின்னரே தெரியவந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பில் இருந்து அவர்கள் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இடங்களில் இருந்து தொடர்புகொண்ட தமது உறவினர்கள், தாம் இந்தோனேசியா ஊடாக கடல்வழிப் பயணமாக அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாக தமக்கு தெரிவித்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தமது கணவர்மாரை இவ்வாறு அனுப்பி வைத்த பல பெண்கள் தாம் இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல அமைப்புக்களிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்படியான கடல் வழிப் பயணங்களில் பலர் நடுக்கடலில் உயிரிழந்தமை குறித்து ஏற்கனவே பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று இவ்வாறு கடல் வழிப்பயணத்தை ஆரம்பித்த 44 பேர் கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.