வியாழன், 15 செப்டம்பர், 2011

இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த தர்கா இடிக்கப்படவில்லை - பொலிஸ்

இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த ஒரு முஸ்லீம் தர்காவை சில பொளத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று கடந்த சனிக்கிழமை இடித்து தரைமட்டமாக்கியதாக அநுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில்:-

இந்த தர்கா, பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அநுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறினார்.

அதேவேளை அந்த தர்கா தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க வந்த முஸ்லிம்களை பொலிஸார் தடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இப்படியான சம்பவம் ஒன்றும் அநுராதபுரத்தில் நடக்கவில்லை என்று இலங்கை பொலிஸ் தரப்பில் பேசவல்ல அதிகாரி மறுத்துள்ளார்.

இது குறித்து இணையத்தளங்களில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த அவர், அப்படி இலங்கையில் உள்ள எந்த ஊடகமும் தகவல் வெளியிடவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகங்களில் அப்படி எதுவும் வந்திருந்தால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.