சனி, 3 செப்டம்பர், 2011

மர்ம மனிதர்கள் விவகாரம்:நிலைமையை விளக்கி இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு கடிதம்

அகில இலங்கை இந்து சமய நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கை நிதியங்களின் கூட்டு உச்ச ஸ்தாபனமாகிய நாம் நாட்டிலுள்ள சகல மக்களையும் முக்கியமாக வடக்கு, கிழக்கிலுள்ள இந்து மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் ஒரு விடயத்தைத் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோமென அ. இ. இந்து மா மன்றம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; அடையாளம் காணப்படாத ‘மர்ம மனிதர்கள்’ நாட்டின் பல பாகங்களிலும் அப்பாவி மக்களைத் தாக்கி அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீரழிப்பதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இப்படிப்பட்ட ‘மர்ம மனிதர்கள்’, சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் பிரிவினரால் அடைக்கலம் கொடுக்கப்படுகிறார்கள் என பொதுமக்களின் மனங்களில் ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பாதுகாப்புத் தரப்பினர் இதனை நிரா கரித்தாலும் இப்படிப்பட்ட மர்ம மனிதர் களின் நடமாட்டம் மேலும் தொடர்கின்ற தென பொதுமக்களால் எமக்கு திரும்பத் திரும்ப முறையிடப்படுகிற அத்துடன், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேதகு ஜனாதிபதியான தாங்கள் உடனடியாகத் தலையிட்டு அப்பாவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்திப் பாதுகாப்புத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மர்ம மனிதர்களின் நடவடிக்கை மூலம் இந்து மக்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதும் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே நாம் இந்த அவசர முறைப் பாட்டை தங்களுக்கு அனுப்ப கடமைப் பட்டுள்ளோம். இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் வீ. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் கேட்டுள்ளனர்.