சனி, 24 செப்டம்பர், 2011

புங்குடுதீவில் யுவதி மீது பலாத்கார முயற்சி, ஓட்டோ சாரதி கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து புங்குடுதீவு இறுப்பிட்டியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒட்டோ சாரதி ஒருவர் நேற்று இரவு ஊர்காவற்றுறை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பஸ் ஒன்றில் புங்குடு தீவுக்குச் சென்ற 23 வயதுள்ள இளம் பெண் இறுப்பிட்டிக்குச் செல்வதற்காக பெருங்காட்டுச் சந்தியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக அங்கு நின்ற ஓட்டோவை வாடகைக்கு அமர்த்தி உள்ளார்.

இரவு நேரம் என்பதால் பஸ்ஸில் வந்திறங்கிய ஒரு முதியவர் அந்தப் பெண்ணுக்குத் துணையாகச் செல்ல யோசித்துத் தானும் அந்தப் பெண்பிள்ளையின் வீடுவரை வந்து திரும்பி வருவதாகவும் ஓட்டோ சாரதியிடம் தெரிவித்துள்ளார்.

ஓட்டோ சாரதி குறிப்பிட்ட பெண்பிள்ளை தனது உறவினர், தெரிந்தவர் என்று கூறி அந்தப் பெரியவரைத் தவிர்த்து விட்டு பெண்ணை மட்டும் ஏற்றிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டோ எனது வீட்டுக்குச் செல்வதற்கான பாதையை விடுத்து ஊரதீவுக்குச் செல்லும் வீதியூடாகச் செல்வதைத் கண்டதும் நான் சத்தம் போட்டேன். எனினும் சன சந்தடி யற்ற அந்த இடத்தில் வைத்து ஒட்டோ சாரதி என்னைப் பலாத்காரம் செய்ய முயற்சித் தார் என்று தனது முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் சாரதி முறை தவறி நடந்து கொள்வது குறித்து பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் முறையிடுவேன் என்று யுவதி மிரட்டியதை அடுத்து பயந்து போன சாரதி, அவரை ஏற்றி வந்து வீட்டுக்கு அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.