திங்கள், 5 செப்டம்பர், 2011

கருணை மனு விவகாரம்: இந்திய மத்திய அரசு விபரம் வெளியிட உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் சமர்ப்பித்த கருணை மனுக்கள் மீதான தகவல் பரிமாறல் விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டுமென தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கருணை மனுக்கள் மீதான தகவல் பல்வேறு தரப்புகளுக்கும் பரிவர்த்தனை செய்யப்பட்ட விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டுமென மயில்சாமி என்ற சட்டத்தரணி தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

கருணை மனுக்கள் மீது மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரை, மத்திய அரசுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், யார் யாரெல்லாம் கருணை மனுவை ஆதரித்து மனு செய்திருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்களை தனக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பதாக மயில்சாமி கூறியிருந்தார். இதை விசாரித்த தகவல் ஆணையம் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை வெளியிடுவது பாதுகாப்பு சம்பந்தமானது என்பதால் அதைத் தவிர்த்து பிற தகவல்களை மனுதாரருக்கு அளிக்குமாறு மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டால் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க இத்தனை ஆண்டு காலம் தாமதமானது ஏன் என்பது குறித்த விவரங்கள் வெளியாக லாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.