கட்டாக்காலி நாய்களை கொல்வது தொடர்பாக கடந்த 5 வருட காலமாக அமுலில் இருந்த தடையுத்தரவை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. தினமும் நாய்க்கடியினால் சுமார் 2000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே இதற்குக் காரணம்.
இலங்கையின் சட்டங்கள் கட்டாக்காலி மிருகங்களை அதிகாரிகள் கொல்வதற்கு அனுமதிக்கின்றன. எனினும் மிருக உரிமைக் குழுக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து கட்டாக்காலி மிருகங்களைக் கொல்வதை இடைநிறுத்த 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டது.
அதன்பின் நாய்களை கொல்லாமல் மலடாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
எனினும் தற்போது இலங்கையிலுள்ள நாய்களின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளதுடன் இலங்கையிலுள்ள 2 கோடி மக்களின் ஆரோக்கிய பிரச்சினையாகவும் கட்டாக்காலி நாய்கள் உள்ளன. இந்நிலையிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறுகையில், 'எமது கொள்கை தோல்வியுற்றுள்ளது. ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது முந்தைய நடைமுறையை பின்பற்றத் தீர்மானித்துள்ளோம்' என்றார்.
