அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக களனி பிரதேச சபைத் தவிசாளரும் அச்சபையின் ஏனைய அங்கத்தவர்கள் குழுவும் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பொருளாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவை நேற்றுமாலை சந்தித்ததாகவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
களனி பிரதேசசபை அங்கத்தவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சர்ச்சையில் சம்பந்தபட்ட அனைத்துதரப்பினரும் தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஒழுக்காற்று குழு கோரியுள்ளது. அதன்பின் இப்பிரச்சினை கட்சி மட்டத்தில் தீர்த்துக்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
அமைச்சர் மேர்வின் சில்வா, கப்பம் பெறுதல் மற்றும் நிதி துஷ்பிரயோகங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக களனி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக களனி பிரதேச சபைத் தவிசாளர் பிரசன்ன ரணவீர கூறுகையில், 'இவ்விவகாரத்தை ஜனாதிபதி மற்றும் கம்பஹா மாவட்ட சு.க. தலைவர் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக ஒழுக்காற்றுக்குழு உறுதியளித்துள்ளது. எமக்கு நியாயம் வழங்கப்படும் என நாம் நம்புகிறோம். கட்சித் தலைமையை நாம் மதிக்கிறோம். இப்பிரச்சினை தீர்க்கப்படும்வரை நாம் மௌனமாக இருப்போம்' என்றார்.
