கல்முனை பிரதேசத்தில் பாடசாலை செல்லும் 14-17 வயதிற்கு இடைப்பட்ட 23 சிறுவர்கள் தனியார் கடைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தின் கல்வி நடவடிக்கைப் பிரிவினர் பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வொன்றினை மேற்கொண்டனர்.
இவ் ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தெரிவித்தார்.
இவ் அமைப்பினர் மேற்கொண்ட ஆய்வின்படி கல்முனைப் பிரதேசத்திலுள்ள நகைக்கடை, தேனீர்க்கடை, பலசரக்குக்கடை, பொதுச்சந்தை என்பவற்றிலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்து அவர்களது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்குரிய அனைத்து வேலைத் திட்டங்களையும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
